அருகில் உள்ள வீடுகளை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு கோயிலில் புகுந்து 22 பவுன் நகை 16 கிலோ வெள்ளி கொள்ளை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த சந்தூரில் வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. நேற்று காலை கோயிலுக்கு பூசாரி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 22 பவுன் நகை, 16 கிலோ வெள்ளி திருடு போயிருந்தது. இதனிடையே அக்கம்- பக்கம் உள்ள வீடுகள் வெளிபக்கமாக தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. வீட்டிலிருந்தவர்கள் கதவை திறக்க முடியாததால் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவ்வழியாக சென்றவர்களை அழைத்து அந்த பூட்டுகளை உடைத்து வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், அக்கம்- பக்கம் உள்ள வீடுகளை வெளிப்பக்கமாக தாழிட்டு, கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சுவாமி நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதேபோல், கோயில் அருகே இருந்த சின்ராஜ் என்பவரது வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் 2 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவு நேரத்தில்  மர்ம நபர்கள் கோயில் அருகேயுள்ள 5 வீடுகளை வெளிப்பக்கமாக பூட்டி கோயிலுக்குள் புகுந்து கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் செல்லும்போது, சின்ராஜ் வீட்டில் நகை, பணத்தை கெள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

Related Stories: