தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சி வழங்கியது செயற்கை கோள் இணைப்புடன் நடமாடும் நவீன கட்டுப்பாட்டு அறை வாகனம்: டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார்

வேலூர்: தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சியில் செயற்கை கோள் இணைப்புடன் கூடிய நடமாடும் நவீன கட்டுப்பாட்டு அறை வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார். வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி நிதியில் தற்போது வரை நகரம் முழுவதும் 937 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரின் 6 முக்கிய இடங்களில் சுழலும் கேமராக்களுடன் ஸ்பீக்கர்கள் கொண்ட உயர்கோபுர கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது.

இதன் ஒரு பகுதியாக ரூ.52 லட்சம் மதிப்பில் தமிழகத்தில் முதல் முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன், செயற்கை கோள் இணைப்புடன் கூடிய சிசிடிவி மொபைல் கட்டுப்பாட்டு வாகனத்தை வாங்கியுள்ளது. இவ்வாகனம் மாநகராட்சி, மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்திருக்கும். இவ்வாகனத்தில் உள்ள கேமராக்கள் மூலம் 2 கி.மீ தூரம் வரை கண்காணிக்க முடியும். இவ்வாகனத்தை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று மதியம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் நவீன ஒருங்கிணைந்த காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினர்.

இதனை பெற்றுக் கொண்டு டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பல தொழில்நுட்ப வாகனங்கள் இருந்தாலும் இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் வாகனம் ஆகும். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் அன்று 6ம் தேதி இது பயன்படுத்தப்படும். இது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மட்டுமின்றி சென்னை தலைமை கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்கப்படும். போதை பொருள் நடமாட்டம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.கஞ்சா பயிரிடுபவர்கள், தொழிலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சைபர் குற்றங்கள், ஆன்லைன் ரம்மி தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சைபர் கிரைமில் 48 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நடமாடும் நவீன கட்டுப்பாட்டு மைய வாகனத்தை வேலூர் மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

Related Stories: