மற்றொருவருடன் ‘டேட்டிங்’காதலியை சுட்டுக் கொன்று எரித்த காதலன்

ராய்ப்பூர்: காதலி மற்றொருவருடன் டேட்டிங்கில் இருந்ததால், அவரை காதலனே சுட்டுக்கொன்று சடலத்தை எரித்தார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தனு குர்ரே (26) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரது காதலன் ஒடிசா மாநிலம் பலாங்கீரை சேர்ந்த தொழிலதிபர் சச்சின் அகர்வால்(40). இருவரும் கடந்த 2019 முதல் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். கடந்த மாதம் 19ம் தேதி, காதலியை பார்க்க சச்சின் அகர்வால் ராய்ப்பூர் வந்துள்ளார். இருவரும் அங்குள்ள மாலில் சினிமா பார்த்துள்ளனர். அப்போது, தனு குர்ரே வேறுறொருவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார்.

இதனால், வேறு ஒருவருடன் தனு குர்ரே தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்ட சச்சின் அகர்வால், தியேட்டரிலேயே சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி தனு குர்ரே மாயமாகிவிட்டார். இது பற்றி அவரது குடும்பத்தினர் ராய்ப்பூர் போலீசில் புகார் செய்தனர். தனு, சச்சினின் காதல் பற்றியும் போலீசிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் பலாங்கீரில் உள்ள காட்டுப்பகுதியில், கடந்த 24ம் தேதி இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அது தனு குர்ரேயின் சடலம் என்பது தெரியவந்தது.  

இதையடுத்து, சச்சின் அகர்வாலை ஒடிசா போலீசார் தேடி வந்தனர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரை கைது செய்தனர். விசாரணையில், தனு குர்ரேயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது வேறு ஒருவருடன் நீண்ட நேரம் தனு பேசினாள். மற்றொருவருடன் டேட்டிங்கில் அவள் இருப்பது தெரிந்ததால், தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். ஒடிசாவுக்கு வா, என் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி அழைத்தேன். அவளும் வந்தாள், வரும் வழியில் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, தனுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன். பின்னர், பெட்ரோல் ஊற்றி சடலத்துக்கு தீ வைத்தேன் என்று கூறியுள்ளான்.

Related Stories: