கேம்பஸ் இன்டர்வியூவில் அசத்தல் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் சென்னை ஐஐடி மாணவர்கள் டாப்: 25 பேர் தேர்வு; கவுகாத்தி ஐஐடியில் 5 பேருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான கேம்பஸ் நேர்முக தேர்வில் சென்னை ஐஐடி மாணவர்கள் 25 பேர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளத்திற்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் இருந்து வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணியை பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. இந்த ஆண்டு நடந்த முதல்கட்ட தேர்வில் சென்னை ஐஐடி மாணவர்கள் வழக்கம் போல் சாதனை படைத்துள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு சம்பளத்திற்கு இதுவரை 25 மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தேர்வு செய்துள்ளன.

அதே போல் கவுகாத்தி ஐஐடியில் படிக்கும் 5 மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலகின் முன்னணி நிறுவனங்கள் சென்னை ஐஐடி மாணவர்களை முன்னிலைப்படுத்தி தேர்வு செய்துள்ளன. குறிப்பாக சொல்லப்போனால் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் 14 பேரையும், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் மற்றும் சேட்டாக் நிறுவனம் 10 பேரையும், குவால்காம் 8, ஜேபி மோர்கன் 9, புரேக்டர் அன்ட் கேம்பிள் நிறுவனம் 7, மோர்கன் ஸ்டேன்லி நிறுவனம் 6, கிராவிட்டன் 6, மெக்கன்சே 5, கோகெசட்டி நிறுவனம் 5 பேரையும் தேர்வு செய்துள்ளன.

சென்னை ஐஐடியில் கடந்த ஆண்டு நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 407 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு அதைவிட 10 சதவீதம் கூடுதலாக 430 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ஐஐடி கவுகாத்தியிலும் முதல்நாள் தேர்வில்290 மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர். இதில் 5 பேர் ஆண்டு சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர். அங்கு மொத்தம் 89 நிறுவனங்கள் வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்தன.  

ரூர்கி ஐஐடியில் ஒரு மாணவர் ரூ.1.06 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டார்.இன்னொரு மாணவர் ரூ.1.30 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் 10 மாணவர்கள் ஆண்டு சம்பளம் ரூ.80 லட்சத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: