2 பேரை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறிப்பு: 8 பேருக்கு வலை

சென்னை: திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான முகமது அரிசத் (20), விஜய் (21) ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது கஞ்சா போதையில் 4 பைக்கில் வந்த 8 பேர், முகமது அரிசத்திடம் கத்தி முனையில் செல்போன் பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த முகமது அரிசத் மற்றும் விஜய் ஆகியோர் அலறி கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனே 8 பேர் கொண்ட கும்பல், கையில் வைத்திருந்த கத்தியால் முகமது அரிசத்தின் தலையில் ஓங்கி வெட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் விஜயிடம் ரூ.500 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். இதில் படுகாயடைந்த முகமது அரிசத்தை விஜய் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய 8 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: