புழல் சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல்: புழல் மத்திய சிறையில், நேற்று முன்தினம் இரவு தண்டனை பிரிவில் காவலர்களின் சோதனையின்போது, கைதி ஒருவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை புழல் மத்திய சிறையில், தண்டனை பிரிவில் 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கைதிகளை சிறைக்குள் அடைக்கப்பட்டனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு சிறைக் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை ஓரத்தில் ஒரு கைதி சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அவரை சிறை காவலர் பரிசோதித்ததில், அவரின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அந்த தண்டனை கைதியிடம் சிறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அந்த தண்டனை கைதி சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஜிலானி (24) எனத் தெரியவந்தது. மேலும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைதாகி 3 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்தது. இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டனை பிரிவில் இருந்த கைதிக்கு செல்போன் எப்படி வந்தது, பலத்த பாதுகாப்பை மீறி சிறைக்குள் செல்போன் கொண்டு செல்லப்பட்டது எப்படி என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: