அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிரடி பேச்சு; இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன்

சென்னை: நீதிமன்றங்களில் அந்தந்த வட்டார மொழிகளை வழக்காடும் மொழியாக சேர்ப்பதற்கு அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். இதில் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ, பட்டம், ஆராய்ச்சி படிப்புகள் முடித்த மொத்தம் 5 ஆயிரத்து 176 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர கல்வியில் சிறந்து விளங்கிய 41 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் ‘இந்திய ஜனநாயகத்தை குற்றமயமாக்குதல்- ஒரு விமர்சன ஆய்வு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்த எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தலைவரும், வக்கீலுமான குமார் ராஜேந்திரன் பட்டம் பெற்றார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அவருக்கு பட்டம் வழங்கினார்.

தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: இந்தியாவில் ஒரேமொழி என்று திணிப்பதை நான் எதிர்க்கிறேன்.

மாநில மொழிகளுக்கும் நாம்  கண்டிப்பாக முன்னுரிமை அளிக்கவேண்டும். . நீதிமன்றங்களில் அந்தந்த வட்டார மொழிகளை வழக்காடும் மொழியாக சேர்ப்பதற்கு அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் தமிழில் வழக்காடும்போது பெருமை வாய்ந்ததாகத்தான் இருக்கும்.  இந்திய அரசியலமைப்பில் தமிழ் உள்பட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆங்கிலம் பொது மொழியாக இருந்தாலும், வட்டார மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி, அனைத்து மொழிகளையும் மொழி பெயர்ப்பு செய்து கொள்ள முடியும். அதனை பயன்படுத்தி, பொது மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், புகார் தெரிவித்தவர்கள் கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: