கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தித்துறை செயலாளர் சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கி.ராஜநாராயணன் கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1991ம் ஆண்டு கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது கி.ராவுக்கு வழங்கப்பட்டது.கி.ராஜநாராயணன் கடந்தாண்டு மறைந்தார்.

இந்நிலையில் கி.ரா-வின் நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும். கி.ரா-விற்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்தார். கி.ரா-வின் நினைவாக  அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிலையில். கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: