வீட்டுவசதி, விளையாட்டு துறை செயலாளர்கள் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; செய்தி துறை செயலாளராக செல்வராஜ், டிடிசிபி இயக்குநராக கணேசன் நியமனம்

சென்னை: தமிழகத்தில் வீட்டு வசதி, விளையாட்டுத்துறை செயலாளர்கள், முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செய்தி துறை செயலாளராக செல்வராஜ், டிடிசிபி இயக்குனராக கணேசன் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒரு சில அதிகாரிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, 15 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையராக உள்ள அதுல்ய மிஸ்ரா விளையாட்டு, மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக உள்ள அபூர்வா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு முதன்மை செயலாளராகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு முதன்மை செயலாளராக இருந்த ஹித்தேஷ்குமார் மக்வானா டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் சன்ஷோங்கம் ஷடக் சிரு சமூகநலன் மற்றும் பெண்கள் திறன் மேம்பாடு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த ஷம்பு கல்லோலிகர் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார். விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் சிறப்பு செயலாளர் டி.ஆபிரகாம் சமூக சீர்திருத்த துறை செயலாளராகவும், நகர பஞ்சாயத்து ஆணையர் ஆர்.செல்வராஜ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில் முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிக துறை சிறப்பு செயலாளர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரிய சிறப்பு செயலாளராகவும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார வளர்ச்சி துறை நிர்வாக இயக்குநர் ஆர்.நந்தகோபால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையராகவும், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா டவுன் பஞ்சாயத்து இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் எஸ்.பழனிசாமி பள்ளி கல்வி துறை கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டம்-2 இயக்குநர் பி.கணேசன் நகர மற்றும் ஊரமைப்பு துறை திட்ட இயக்குனராகவும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் அனில் மேஸ்ராம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார வளர்ச்சி துறை நிர்வாக இயக்குநராகவும், நகர மற்றும் ஊரமைப்பு துறை திட்ட இயக்குனர் சரவணவேல்ராஜ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநராகவும், வருவாய் நிர்வாக துறை இணை ஆணையர் ஜான்லூயிஸ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராகவும், மருத்துவ சேவை பணியாளர் வாரிய உறுப்பினர் செயலாளர் எம்.என்.பூங்கொடி, சேலம், ஜவ்வரிசி ஆணைய நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: