மற்றொருவருடன் ‘டேட்டிங்’கில் இருந்ததால் காதலியை பெட்ரோல் ஊற்றிக் கொன்ற காதலன்: சட்டீஸ்கரில் போட்ட திட்டம் ஒடிசாவில் முடிந்தது

ராய்ப்பூர்: காதலி மற்றொருவருடன் டேட்டிங்கில் இருந்ததால், அவரை பக்கத்து மாநிலத்திற்கு அழைத்து சென்று அவரது காதலனே பெட்ரோல் ஊற்றிக் கொன்ற சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த தனு குர்ரே என்பவர் ராய்ப்பூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவரும் பலங்கிர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சச்சின் அகர்வால் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், குடும்பத்தினர் பாண்டிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குபதிந்து தனு குர்ரேவை தேடி வந்தனர்.

இதுகுறித்து ராய்ப்பூர் எஸ்எஸ்பி பிரசாந்த் அகர்வால் கூறுகையில், ‘மாயமான தனு குர்ரே - சச்சின் அகர்வால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை, பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சச்சின் அகர்வாலின் பின்னணி குறித்து விசாரித்தோம். தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் பலங்கிரில் இளம்பெண் ஒருவரின் எரிக்கப்பட்ட சடலம் மீட்கப்பட்டது. இருமாநில போலீசாரும் தீவிர விசாரணை நடத்தியதில் எரித்துக் கொல்லப்பட்ட பெண், தனு குர்ரே என்பது தெரியவந்தது. அதையடுத்து சச்சின் அகர்வாலை தேடி வந்தோம். கடைசியாக ஒடிசா போலீசார் சச்சின் அகர்வாலை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதல் ஜோடி இருவரும் சம்பவ நாளில் ஒடிசா மாநிலத்தை சுற்றிப் பார்ப்பதற்காக ஜாலியாக சென்றுள்ளனர்.

ராய்ப்பூரில் இருந்து சுமார் 200 கி.மீ தூரமுள்ள ஒடிசாவின் பலங்கிர் வரை காதலியை அழைத்து சென்ற சச்சின் அகர்வால், அங்குள்ள மறைவான இடத்தில் தனு குர்ரேவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொன்றுள்ளான். தனு குர்ரேவின் உடலை அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரித்துவிட்டு தப்பிவிட்டான். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, தனது காதலி தனு குர்ரே, வேறொரு இளைஞருடன் ‘டேட்டிங்’கில் இருப்பது தெரியவந்ததால், அவரை கொல்ல திட்டமிட்டான். அதற்காக தனு குர்ரேவிடம் ஆசை வார்த்தை கூறி ஒடிசா அழைத்து வந்து தீ வைத்து கொன்றுள்ளான். தற்போது உயிரிழந்த தனு குர்ரேவின் சடலத்தின் எச்சத்தை ஒடிசா போலீசார் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சின் அகர்வாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: