உலக கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி; கொரோனாவால் நலிந்த ‘பப்’ தொழில் கொடிகட்டி பறக்குது: கூட்டம் கூட்டமாக வந்து கும்மாளமடிக்கும் ரசிகர்கள்

லண்டன்: அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனாவால் நலிந்த ‘பப்’ தொழில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டியால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த நவ. 20ம் தேதி கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ள நிலையில், அந்த நாடுகளின் இருக்கும் ரசிகர்கள் கும்பலாக அமர்ந்து கால்பந்து போட்டியை ரசித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் ‘பப்’களில் (கேளிக்கை மற்றும் மதுபானம் அருந்தும் விடுதிகள்) ஒன்றுகூடி கால்பந்து போட்டியை பார்த்தும், கும்மாளமடித்தும் வருகின்றனர்.

கொரோனா காலத்தில் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்த ‘பப்’கள், தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. கத்தாரில் நடக்கும் போட்டிகளை டிவியில் பார்ப்பதற்காக, மதுபானங்களை வாங்கிக் கொண்டு பப்புகளுக்கு ரசிகர்கள் படையெடுத்துவிடுகின்றனர். அதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு முன்பாகவே, இங்கிலாந்தில் உள்ள பப்கள் நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து கால்பந்து அமைப்பான ஃபிஃபா-வின் நிர்வாகிகள் கூறுகையில், ‘உலகெங்கும் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் கால்பந்து போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள், ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் 27ல் நடந்த ஜப்பான் - கோஸ்டாரிகா போட்டியை 36.37 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2018 ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் போட்டியை பார்த்த சராசரி பார்வையாளர்களை விட 74% அதிகம். அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில், அமெரிக்கா - இங்கிலாந்து போட்டியை அமெரிக்காவில் 19.65 மில்லியன் பேரும், இங்கிலாந்தில் 18 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்’ என்றனர்.

காப்பீட்டு நிறுவனமான சிம்ப்லி பிசினஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்றில் இரண்டு பங்கு ரசிகர்கள் பப்களில் மதுபானங்களை அருந்திக் கொண்டே போட்டியை ரசிக்கின்றனர். இதனால் பப்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பப்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

Related Stories: