திருப்பரங்குன்றம் அருகே நிரம்பி மறுகால் பாயும் நிலையூர் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நிலையூர் கண்மாய். சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயின் எல்லை தோப்பூர், தனக்கன்குளம், திருநகர் உள்ளிட்ட பகுதிகள் வரை நீண்டுள்ளது. இந்த கண்மாய் மூலம்  நிலையூர், கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் நிரம்பி  வெளியேறும் உபரிநீர், இப்பகுதியில் உள்ள சொக்கதேவன்பட்டி, கப்பலூர், ஆலங்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்கிறது.  

தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பிய மறுகால் பாய்வதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம், கண்மாயின் வடக்கு பகுதியான தனக்கன்குளம், சொளபாக்கிய நகர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும்  மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, கண்மாய் தூர் வாரி அதிக தண்ணீரை சேமிக்கவும், குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: