கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அர்ச்சகர் சீதாராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக சில அர்ச்சகர்களும், செக்யூரிட்டிகளும் செல்போன்கள் மூலம் சாமிக்கு செய்யும் அபிஷேகம், பூஜைகளை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் வருகின்றனர். எனவே, கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்டு திருச்செந்தூர் அறநிலையத்துறை ஆணையர் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த நீதிமன்றத்தின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் இன்று அந்த கோயிலில் செல்போன் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கோவிலின் உள்ளே யாரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.

Related Stories: