பொதுமக்களிடம் பணம் வசூலித்த புகார்; மின்வாரிய தொழிலாளிக்கு ‘பளார்’ விட்ட காங். எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து மின்வாரிய தொழிலாளியை பெண் எம்எல்ஏ பளார் விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாமன்வாஸ் காங்கிரஸ் எம்எல்ஏ இந்திரா மீனாவிடம், அவரது தொகுதியை சேர்ந்த விவசாயிகள் தரப்பில் மின்வாரியம் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனால், பவுலியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு எம்எல்ஏ இந்திரா மீனா வந்தார். அவர், ஸ்டோர் கீப்பர் அறைக்குச் சென்று அங்கிருந்த பதிவேட்டை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்மாற்றிகளை அமைத்து தரவேண்டும் என மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அப்போது அங்கிருந்த ஒருவர், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி பூரன்மாள், பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் அளித்தார். அதிர்ச்சியடைந்த இந்திரா மீனா, சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளியை அழைத்து திட்டினார். அப்போது இந்திரா மீனாவிற்கும், பூரன்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தன்னுடைய ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத எம்எல்ஏ இந்திரா மீரா, ஒப்பந்த தொழிலாளி பூரன்மாளை பளார் என்று அறைந்தார். அதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் செல்போனில் எம்எல்ஏ தாக்கிய சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

இதுகுறித்து எம்எல்ஏ இந்திரா மீனா கூறுகையில், ‘மின்வாரிய அலுவலகம் மீது புகார்கள் வந்ததால் நேரில் சென்று விசாரணை நடத்தினேன். ஒப்பந்த தொழிலாளி மக்களிடம் பணம் கேட்பதாக கூறப்பட்டது. அவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினேன். அவ்வளவுதான்’ என்று கூறினார். கடைசிவரை தான் அவரை அடித்ததாக கூற மறுத்துவிட்டார்.

Related Stories: