×

சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசு பேருந்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியின் போது இயந்திரம் விழுந்து சேதமான அரசு பேருந்திற்கு இழப்பீடு வழங்கியுள்ளது. மெட்ரோ பணியை செய்துவரும் தனியார் நிறுவனம் இழப்பீடாக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2.50 லட்சம் வழங்கியது.

சென்னை வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் தூக்க கலக்கத்தில் இயக்கியதே காரணம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை வடபழனி ஆற்காட் சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரத்னா ஸ்டோர் அருகே ராட்சத கிரேன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ராட்சத கிரேன் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற மாநகர பேருந்தின்  தடம்எண் 159A மீது மோதியதில், பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுறம் முழுவதுமாக சேதமடைந்தன. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால் இவ்விபத்தில் பேருந்து ஒட்டுநர் பழனிக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வடபழனி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த பேருந்தை அப்புறப்படுத்தினர். பின்னர் விபத்து ஏற்படுத்திய சேர்ந்த கிரேன் ஆப்ரேட்டரை விசாரணை நடத்தியதில் தூக்க கலக்கத்தில் கிரேனை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்தது என தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சேதமடைந்த அரசு பேருந்துக்கு மெட்ரோ பணியை செய்து வரும் தனியார் நிறுவனம் இழப்பீடாக ரூ.2.5 லட்சம் வழங்கியுள்ளது.



Tags : Chennai Vadapalani , Rs 2.50 lakh compensation for the government bus whose engine fell and was damaged during metro rail work at Chennai Vadapalani
× RELATED லோகேடோ ஆப் மூலம் வடபழனியில் பாலியல்...