×

அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: கழக மாணவர் அணியின் கட்டமைப்பை வலுபடுத்த தீர்மானம்

சென்னை: தி.மு.க. மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 02.12.2022 வெள்ளிக்கிழமை, காலை 09.30 மணியளவில், சென்னை, “அண்ணா அறிவாலயத்தில்” உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலசோனை கூட்டத்தில் கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கலந்தாலோசனை கூட்டத்தில், அணியின் துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் - 1: கழக மாணவர் அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி!
கழகத்தின் 15வது பொதுத் தேர்தலுக்கு பிறகு, கழக மாணவர் அணிக்கு புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துகின்ற வகையில் மீண்டும் மாணவர் அணிச் செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., அவர்களையும் மற்றும் அணியின் தலைவராக இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்களாக பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்களாக மன்னை த. சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி உள்ளிட்ட அனைவரையும் நியமித்து கழகப் பணியாற்றுகின்ற வாய்ப்பினை வழங்கிட்ட கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி, கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் தமது செம்மார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

கழக மாணவர் அணிக்கு, உரிய நேரத்தில் ஆலோசனை வழங்கி வழிநடத்தும் கழக இளைஞர் அணியின் செயலாளர்-இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 2: இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்குகள் - கட்டுரைப் போட்டி - பேச்சுப் போட்டி நடத்தி கொண்டாடுவீர்!

தந்தை பெரியாரின் தன்மானம் செறிந்த பகுத்தறிவு - சுயமரியாதை நெறியில், பேரறிஞர் அண்ணாவின் இனம் - மொழி - விடுதலை உணர்ச்சி தரும் வேகத்துடன், தலைவர் கலைஞர் அவர்களின் சமூக நீதி - சமத்துவக் கொடியை தனது வாழ்நாள் வரை சிறிதும் தளராமல் தாங்கிப் பிடித்த கொள்கைச் சூரியனாய் என்றும் ஒளிவீசும் இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை கொண்டாடுவது நமக்கெல்லாம் பெருமையையும், பெரும் உந்துதலையும் உருவாக்குகிறது என்று கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி குறிப்பிட்டு காட்டியுள்ளதற்கிணங்க, பேராசிரியர் பெருமகனாரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகின்ற கடமை உணர்வோடு, மாணவர்களிடம் இனம், மொழி, பகுத்தறிவு சிந்தனை, சுயமரியாதை உணர்வு இவற்றை பரப்புரை செய்கின்ற நிகழ்வுகளாக கருத்தரங்குகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதென என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 தீர்மானம்-3: கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி வழிகாட்டுதலில், கழகப் பணியில் திறம்பட செயல்படுவோம்!

கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி, நேற்றைய 01-12-2022 முரசொலி நாளிதழில் நம் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல, “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிற ஆரிய - திராவிட பண்பாட்டுப் போரில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஜனநாயக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

இனத்தின் மீதும், மொழியின் மீதும், மாநிலத்தின் உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரை நேர்மையாக எதிர்கொண்டு வருகிறோம். அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறோம். அந்த வெற்றி தொடர்ந்திட, கழக அணிகள் அனைத்தும் அணிவகுத்து ஆயத்தமாக நின்றிட வேண்டும்.”

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கேற்ப அரசியல் - சமுதாய - பண்பாட்டுப் பகைவரை வென்றிடவும், நம் தாய்மொழியாம் தமிழையும், தாய்நிலமாம் தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியம் முழுவதற்குமான ஜனநாயகத்தையும் காத்திடக் களம் காண வேண்டிய கடமை வீரர்களாக கழக அணியினர் திகழ வேண்டும்’ என்பதை உணர்ந்து,

மாநில உரிமைகளை பறிக்க அத்தனை குறுக்கு வழிகளையும் கையாளும் பாசிச பா.ஜ.க. அரசின் முகத்திரையை கிழித்தெறியவும், ஆதிக்க இந்தி மொழி திணிப்பிலிருந்து தமிழ் மொழியை காத்திடவும், புதிய கல்விக் கொள்கை, தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே தேசம்-ஒரே மொழி என்று ஆரிய சித்தாந்தத்தை பின்வாசல் வழியே திணிக்கும் பா.சி.ச. பா.ஜ.க. அரசை எதிர்த்து போர்களம் காண, கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஆணையேற்று, தடைகளை தகர்த்து, கழகத்தை வலுப்படுத்த, நம் கழகம் முன்னெடுக்கும் அனைத்து நிகழ்வுகளிலும், களத்தில் முன்கள படை வீரர்களாக பணியாற்றுவோம் எனவும், கழகத் தலைவர் அவர்களின் கொள்கைகளையும், நல்லாட்சியின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் தூவர்களாக கழக மாணவர் அணியினர் செயல்படுவோம் என்று இக்கூட்டத்தில் சூளுரை ஏற்று தீர்மானிக்கிறது.

தீர்மானம்-4: கழக மாணவர் அணியின் கட்டமைப்பை வலுபடுத்துவோம்!

திராவிட இயக்க சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற கொள்கை உணர்வோடு, வட்டங்கள் தோறும் கழக மாணவர் அணிக்கு நிர்வாகிகளை நியமிக்க உத்தரவு வழங்கிட்ட, கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு செம்மார்ந்த நன்றியினை தெரிவித்து, முதற்கட்டமாக மாவட்ட அளவிலான அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யவும், அதையொட்டி மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டங்கள் வரையிலும் மாணவர் அணியின் அமைப்பினை ஏற்படுத்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளில் உள்ள மாணவர்களை, அணியின் உறுப்பினர்களாக சேர்த்து, தி.மு.க. மாணவர் அணியின் அமைப்புகளை கட்டமைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறான தீர்மானங்கள் இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


Tags : DMK ,Anna ,University , Anna Vidyalayam, D.M.K. STUDENT TEAM STATE ADMINISTRATORS CONFERENCE MEETING, STUDENT TEAM, RESOLUTION
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...