கோவையில் அதிமுக உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

கோவை: கோவை மாவட்ட அதிமுக சார்பில், தார்ச்சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவானந்தாகாலனியில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.  முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தார்ச்சாலை வசதி, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கோவை மாவட்டம் அன்னூரில் தொழில்பூங்கா திட்டத்தை கைவிட்டு, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை எடுக்கக்கூடாது. கோவையில் குண்டும், குழியுமாக காட்சி தரும் சாலைகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும். சிமென்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதை, கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உண்ணாவிரத பந்தலுக்கு வெளியேயும் அதிமுக தொண்டர்கள் நின்றுகொண்டிருந்தனர். இது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அந்த வழியாக சென்ற ஒரு தனியார் ஆம்புலன்ஸ் இக்கூட்டத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: