ஐதராபாத் நகைக்கடையில் பயங்கரம்; துப்பாக்கியால் சுட்டு ரூ1 கோடி நகை கொள்ளை: 4 பேர் கும்பல் கைவரிசை

திருமலை: ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் மர்ம கும்பல் துப்பாக்கியுடன் புகுந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரி சுட்டனர். இதனால் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த சுமார் ₹1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வாரிசுருட்டிக்கொண்டு தப்பியது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கல்யாண்சவுத்ரி. இவர் குடும்பத்துடன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சினேகபுரி காலனி பகுதியில் வசித்து வருகிறார். அப்பகுதியில் ‘மகாதேவ்’ என்ற பெயரில் நகைகடை நடத்தி வருகிறார்.

இவரது சகோதரர்களும் அதேபகுதியில் தனித்தனியாக நகைக்கடைகளை நடத்தி வருகின்றனர். கல்யாண் சவுத்ரியின் கடையில் ராஜஸ்தானை சேர்ந்த சகாதேவ் (25) என்ற வாலிபர் உட்பட 5க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது கடைக்கான நகைகளை செகந்திராபாத்தில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்கி வந்து விற்பது வழக்கமாம். நகைகளை வழக்கமாக இரவில் சென்று கல்யாண் சவுத்ரி வாங்கி வருவாராம்.

இந்நிலையில் நேற்று தனது கடை ஊழியர் சகாதேவ்வை அனுப்பி ₹1 கோடி மதிப்புள்ள நகைகளை வாங்கி வரும்படி செகந்திராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி கடை ஊழியர் நகைகளை வாங்கிக்கொண்டு நேற்றிரவு 10 மணியளவில் கடைக்கு வந்தார். அதுவரை கடையில் காத்திருந்த கல்யாண் சவுத்ரி, நகைகளை சரிபார்த்து அவற்றை ரேக்கில் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முன்னதாக நகைகள் வந்தவுடன் கடையின் முன்பக்க ‘ஷட்டர்’ கதவுகள் பாதியாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடையின் வெளியே 2 பைக்குகளில் 4 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி வந்து இறங்கினர். அவர்களில் 2 பேர் கடையின் வெளியே நின்றுகொண்டனர். மற்ற 2 பேர் திடீரென துப்பாக்கிகளுடன் கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கடையின் கதவை முழுவதுமாக மூடினர். அப்போது நகைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த கல்யாண் சவுத்ரி மற்றும் ஊழியர் அதிர்ச்சியடைந்தனர்.

என்ன செய்வது என அறியாமல் அவர்கள் திகைத்தனர். இதையடுத்து துப்பாக்கியை காட்டிய 2 மர்ம நபர்களும் தாங்கள் கொண்டு வந்த பைகளில் கடையில் உள்ள அனைத்து நகைகளையும்எடுத்து  போடும்படி மிரட்டினர். ஆனால் கல்யாண் சவுத்ரி நகைகளை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 மர்ம நபர்களும் உடனே துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டனர். இதை தடுக்க முயன்ற ஊழியரையும் சுட்டனர். இந்த சம்பவத்தில் கல்யாண் சவுத்ரிக்கு மார்பு, கை, கால்களில் குண்டுகள் துளைத்தன. இதேபோல் ஊழியருக்கு கையில் குண்டுபாய்ந்தது. இவர்கள் இருவரும் அலறி கூச்சலிட்டனர்.

அதற்குள் துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து நகைக்கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கடை முன் திரண்டனர். அப்போது ஏற்கனவே கடையின் வெளியே காவலுக்கு நின்றிருந்த கொள்ளையர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டினர். இதனால் அங்கு வந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அதற்குள் கடைக்குள் இருந்த 2 கொள்ளையர்களும் அங்கிருந்த ₹1 கோடி மதிப்புள்ள நகைகளை வாரி பைகளுக்குள் போட்டுக்கொண்டு வெளியேறினர். 4 கொள்ளையர்களும் பொதுமக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி தங்களது பைக்குகளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவம் நடந்த கடைக்குள் சென்று பார்த்தபோது கல்யாண் சவுத்ரி உட்பட 2 பேரும் துப்பாக்கி குண்டுகளுடன் காயமடைந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக தகவலறிந்து வந்த ஐதராபாத் போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் நகைக்கடை ஊழியர் செகந்திராபாத்தில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தது முதல் அவரை நோட்டம் விட்டு பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது.

அதன்பின்னர் தங்கள் கைவரிசையை கடையில் வந்து காட்டியுள்ளனர். துப்பாக்கி வைத்திருந்த கொள்ளையர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இதனிடையே நகைக்கொள்ளையர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர், நகை கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: