பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள்மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.12.2022) தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை தொடங்கி வைத்து, இந்நிதியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடும் அடையாளமாக ஏழு ஆவண எழுத்தர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை (Membership Cards) வழங்கினார்.

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் உருவாக்கப்படும் என்று 2007-2008 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பிற்கிணங்க வணிகவரி மற்றும் பதிவுத் துறையால் 28.10.2010 அன்று அரசாணை வெளியிடப்பட்ட போதிலும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த நல நிதியத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து, 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான பதிவுத்துறை மானியக் கோரிக்கையில், பதிவுத்துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக, ஆவண எழுத்தர்களின் நல நிதியம் முழுவதுமாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆவண எழுத்தர்களின் நல நிதியம் குறித்து 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வகையில் நலத் திட்டங்களுக்கான உதவித் தொகை தற்போதைய பண மதிப்பீட்டின் அடிப்படையில் மிகக் குறைவாக உள்ளதாக கருதப்பட்டதால், தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு நலத் திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதியம் நடைமுறைப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதியச் சட்டம், 2022 இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, 30.06.2021 அன்றுள்ளவாறு ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5188 நபர்களிடம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர்களாக சேர ஒருமுறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1000/- வசூலிக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.10/- வீதம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்படும். இவ்வாறு ஒருமுறை செலுத்தப்படும் சந்தா தொகை மற்றும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் நல நிதிய பங்களிப்பு ஆகியவை நிதியமாக நிர்வகிக்கப்பட்டு அதிலிருந்து நல நிதிய நலத் திட்டங்களுக்கான செலவுகள் ஈடு செய்யப்படும்.

ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும்  நிரந்தர ஊனத்திற்கு உதவித் தொகையாக 1 இலட்சம் ரூபாய், இயற்கை மரணம் மற்றும் மற்ற உடல் ஊனங்களுக்கு உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய், மாதாந்திர ஓய்வூதியம், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறுதி சடங்கு நிதி, மூக்குக்கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். பதிவுத்துறை தலைவரை தலைவராகவும், இதர பதிவுத் துறை அலுவலர்களையும், ஆவண எழுத்தர் சங்கத்திலிருந்து நியமனம் செய்யப்படும் 4 நபர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு இந்த நல நிதியத்தை நிர்வகிக்கும்.

ஆவண எழுத்தர்களின் நல நிதியம் தொடக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் திருமதி.பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப, மற்றும் பதிவுத்துறை தலைவர் திரு.ம.ப.சிவன் அருள், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: