முதுமலை தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலியை தேடும் பணி தீவிரம்

நீலகிரி: முதுமலை தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலியை தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்தை பொறுத்தவரை சமீபகாலமாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

இவற்றை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் கொம்பன் என்ற வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது. நேற்று முன்தினம் விடுமுறையில் வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் பின்புறம் சென்றபோது புதரில் பதுங்கியிருந்த புலி அவரை தாக்கியது.

இதில் தலை, முதுகு மற்றும் கை பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் காயமடைந்த அவர் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10 நாட்களாக தெப்பக்காடு பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் முதலே 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த வனப்பகுதியில் தேடினர். அதற்காக 15 இடங்களில் நவீன தானியங்கி  கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர்.

ஆனால் புலியின் காட்சிகள் எதுவும் கேமராக்களில் பதிவாகாத காரணத்தினால் 2 கும்கி யானைகளை உதவியோடு வனத்துறையினர் 3வது நாளாக தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: