×

மின் திருத்த மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிரான 12 பிரிவுகளை நீக்க வேண்டும்; நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்

புதுடெல்லி: மின்சார திருத்த சட்ட மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் 12 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் திமுக எம்பியும், எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்,‘‘மின்சார திருத்த சட்ட மசோதாவால் தமிழக மின்சார வாரியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது.  மேலும் எதிர்காலத்தில் இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் தற்போது விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர வேண்டும்.

மேலும் இந்த சட்டத்திருத்த மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் 12 சட்ட பிரிவுகளை ஒன்றிய அரசு கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும். இதைத்தவிர்த்து முக்கியமாக இந்த மசோதாவை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநிலத்தை சேர்ந்த மின் துறையின் மேலாண்மை ஆணையர்களை நேரில் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அதற்குப் பின்பு தான் நாடாளுமன்ற நிலைக்குழு மசோதா தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக மின்சாரம் என்பது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகம் ஆகியவை ஆகும்.ஏனோ தானோ என்று மின்சார திருத்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu Government ,DMK ,Parliamentary Standing Committee , In the Electricity Amendment Bill, 12 sections against the policy of Tamil Nadu Government should be deleted; DMK's insistence in the Parliamentary Standing Committee meeting
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...