திருமலை: தெலங்கானாவில் புகழ்பெற்ற உஸ்மானியா அரசு மருத்துவமனையில் 2 திருநங்கைகள் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் திருநங்கைகளுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன்படி, ‘2014-ல் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்தநிலையில், தெலங்கானாவில் புகழ் பெற்ற அரசு உஸ்மானியா மருத்துவமனையில் 2 திருநங்கைகள் டாக்டர்களான நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ரூத் ஜான் பால் கொய்யாலா. மல்லாரெட்டி மருத்துவ அறிவியல் கழகத்தில் எம்பிபிஎஸ் படித்தார். இவர், உஸ்மானியா அரசு பொது மருத்துவமனையில் டாக்டராக நியமிக்கப்பட்டார். அவர் கூறும்போது, ‘‘2018ல் மருத்துவக் கல்வியை முடித்து 15 மருத்துவமனைகளுக்கு வேலைக்குச் சென்றும் நிராகரிக்கப்பட்டேன். இதற்கான காரணம் சொல்லாவிட்டாலும், எனக்குப் புரிகிறது’’ என்றார்.