புதுடெல்லி: டெல்லி புதிய கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. டெல்லியில் புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து சோதனையை நடத்தினர். முறைகேடு வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சிசோடியா பெயர் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், புதிய கலால் கொள்கையில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்த அறிக்கை ஒன்றை விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று சமர்பித்தது.