ஜல்லிக்கட்டு பற்றி பேச பீட்டாவுக்கு தகுதி கிடையாது; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி:  ``தமிழகத்தின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து பேச பீட்டா அமைப்புக்கு எந்த தார்மீக தகுதியும் கிடையாது.’’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதங்களை முன்வைத்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும்  சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நான்காவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘விலங்குகள் 2 வகைப்படும், மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டது மற்றது காட்டு விலங்குகள். விலங்குகளின் தனியுரிமை பாதுகாப்பது மனிதனின் கடமையாகும்.  உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு அரசின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.  

 

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கென தனி மைதானம் அமைத்து நடத்தப்படுகிறது.   பீட்டா அமைப்பு கூறுவது போன்று காளைகளின் வாலை முறுக்குவதோ, அடிப்பதோ, காயப்படுத்துவதோ கிடையாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபு, பண்பாட்டோடு இணைந்த கலாச்சாரம் ஆகும். காளைகளை துன்புறுத்துகிறார்கள் என்று கூற பீட்டா அமைப்புக்கு எந்தவித தார்மீக தகுதியோ உரிமையோ கிடையாது. அந்த அமைப்பு சட்டப்பூர்வமான அமைப்பும் கிடையாது. எனவே, தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, அவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர். இவர்களின் முழு ஆய்வுக்கு பிறகு தான் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை 6 வயதுக்கு பிறகு வீடுகளில் வளர்ப்பார்கள். கொல்லும் வழக்கம் கிடையாது. குடும்ப உறவுடன் வீட்டில் ஒருவராக கருதி பெயர் வைத்து அழைப்பார்கள். குறிப்பாக ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல, தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த ஒன்றாகும்,’’ என்றார். இதையடுத்து, அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது காளையை ஒருவர் மட்டும் தான் தழுவுகிறார்கள், மூன்று நான்கு பேர் அதன் மீது விழ அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உங்களால் உறுதியாக கூற முடியுமா? என கேள்வியெழுப்பினார். இதையடுத்து அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர்,‘‘உறுதியாக கூற முடியும். காளை வருகிறது என்றால் ஒருவர் தான் அதை பிடிக்க முயல்வார். பிடிக்க முடியவில்லை என்றால் அவரும் விலகிவிடுவார்,’’ என விளக்கினார்.

 

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர். நீதிபதிகளுக்கு அழைப்பு: இதில் வழக்கு விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு விளையாட்டில் வாடி வாசல் என்றால் என்ன? என்பது எங்களுக்கு புரியவில்லை.  காளைகள் எப்படி அதன் வழியாக வரும், வீரர்கள் அதனை எப்படி அடக்குவார்கள் போன்ற விரிவான விவரங்களை எங்களுக்கு குறுகிய பிரமாணப் பத்திரமாக வழங்க முடியுமா? என கேட்டனர். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞரும் வழங்குகிறோம் என ஒப்புதல் தெரிவித்ததோடு, இந்த வழக்கு விசாரணை முடிந் த பின்னர்,   அனைத்து நீதிபதிகளும் ஜல்லிக்கட்டை பார்க்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

Related Stories: