ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

புதுடெல்லி: ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை நேற்று இந்தியா முறைப்படி ஏற்றுக்கொண்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்பட 15 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது. உலகின் சக்திவாய்ந்த அமைப்பான ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் முறைப்படி ஜி-20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வழங்கினார். அடுத்த ஆண்டு ஜி-20 நாடுகளின் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் இந்தியா பணியாற்றும். இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பருவநிலை நிதி, பேரிடர் அபாய குறைப்பு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவற்றை நிகழ்ச்சி நிரலில் முன்னிலையில் வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி கே மிஸ்ரா கூறியதாவது : இந்தியாவுக்கு பன்முகத்தன்மை உள்ளதைப் போலவே, தனித்துவமும் உள்ளது.

இந்தியாவின் சிறந்த பாரம்பரியங்களை உலகின் முன்பு கொண்டு வர வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்தியா தனது மண்ணில் மிகப்பெரிய பலதரப்பு நிகழ்வை நடத்துவதற்கு ஒரு புகழ்பெற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் ஜி-20 தலைவர் பதவியானது இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளி உலகிற்கு காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகும். பல்கலைக்கழகங்கள், உள்நாட்டு வரலாறு, முக்கிய அடையாளங்கள், கலை வடிவங்கள், பிற கலாச்சார மரபுகள் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

அத்தகைய மாணவர்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுவதிலும் ஒரு பகுதியாக இருக்க முடியும். நாட்டிலுள்ள துடிப்பான ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு இளைஞர்களைப் பொருத்தவரை வானமே எல்லை என்பதற்குச் சான்றாகும். அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு இந்தியா தற்போது உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: