சமூக வலைதளத்தில் மூழ்கியதை கண்டித்ததால் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை; பல்லாவரத்தில் பரிதாபம்

பல்லாவரம்: பல்லாவரம், கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களும், மணிகண்டன் (20) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் படித்து வேலைக்கு செல்லும் நிலையில், மணிகண்டன் மட்டும் வேலைக்கு செல்லாமல் எப்போதும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தாய், ‘‘இப்படி எந்நேரமும் செல்போனில் மூழ்கியிருந்தால் எப்படி. வேலைக்கு சென்று எப்போது சம்பாதிக்க போகிறாய்,’’ என கண்டித்துள்ளார்.

இதனால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு மணிகண்டன் வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். இந்நிலையில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே, ரயில் முன் பாய்ந்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: