சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் டிஜிபி திரிபாதியிடம் 6 மணி நேரம் குறுக்கு விசாரணை: அதிமுக ஆட்சியில் மூத்த அதிகாரிகளுக்குள் மோதல் நடந்தது அம்பலம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பெண் எஸ்பி ஒருவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் சிறப்பு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்த்து, சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஸ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பில் தற்போது விவாதம் நடந்து வருகிறது. அதில் அப்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜரானார். அவரிடம், ராஜேஷ்தாசின் வழக்கில் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, குவைத் ராஜா யார்? அவரை எப்படி உங்களுக்குத் தெரியும் என்று ராஜேஷ்தாசின் வக்கீல் கேட்டார். அவர் ஒரு தொழில் அதிபர். நான் விருதுநகரில் எஸ்பியாக பணியாற்றியபோது முதல் எனக்கு அவர் பழக்கம் என்று திரிபாதி பதில் அளித்தார்.

இந்த பாலியல் புகார் மீதான வழக்கிற்கும், குவைத்ராஜாவை பற்றி கேட்பதற்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவரை பற்றி கேட்கிறீர்கள் என்று திரிபாதி கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ்தாசின் வக்கீலோ, தொடர்பு உள்ளது. அவர்தான்(அதிமுக ஆட்சி இருந்த நேரத்தில்) இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பலருக்கும் பணி மாறுதல் வாங்கிக் கொடுத்துள்ளார். அதை ராஜேஷ்தாஸ் தடுத்தார். அந்த கோபத்தில்தான் என் மீதான புகார் வருவதற்கு காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிபாதி மறுத்துள்ளார். ஆனாலும் காலை 10 மணி முதல் அவரிடம் தொடர்ந்து 6 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இந்த விசாரணையின்போது பல முறை தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார். விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. ஆனாலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர்தான் திரிபாதி. அவருக்கு அடுத்த நிலையில் சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் இருந்தார். இருவருமே ஓடிசாவை சேர்ந்தவர்கள் அவர்களுக்குள் அதிகார மோதலும், முறைகேடும் நடந்துள்ளதைத்தான் இந்த விவாதம் வெளிக் கொண்டு வருவதாக மூத்த அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த 6 மணி நேர சாட்சி விசாரணை போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Related Stories: