மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முதல்வர் தலைமையில் ஆலோசனை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கொளத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதில் மீனவளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பரிமாறினர்.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்டதும், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களை மீட்க முயற்சி எடுப்பதாக கூறும் பாஜ, இனி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்தட்டும். அதற்கு தமிழக பாஜ முயற்சி செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: