ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் ஸ்பிக் நிறுவனத்தில் ‘பாரத் யூரியா’ உரம் விநியோகம் தொடங்கியது

தூத்துக்குடி: ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தில் முதல்முறையாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பாரத் யூரியா உரம் விநியோகம் தொடங்கியது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும்  உரமான யூரியாவின் விலை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு  நிர்ணயம் செய்யும் விலையில் அதை நிறுவனங்கள் விற்கின்றன. உரங்களின்  உற்பத்திச் செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக  வழங்குகிறது. யூரியா தவிர, டிஏபி, எம்ஓபி போன்ற உரங்களின்  விலையை அதிகாரப்பூர்வமாக அரசு கட்டுப்படுத்துவதில்லை. ஆனாலும் அதற்கும்  மானியம் தரவேண்டியுள்ளது.

ஒரே கட்டணம் மற்றும் ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி,  எம்ஓபி மற்றும் என்பிகே போன்ற உரங்களை தயாரிக்கும் எல்லா உர நிறுவனங்களும், ‘பாரத்’ என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும் முத்திரை, பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வர்க் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்பட வேண்டும். நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், முத்திரை  மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புத் தகவல்களை தங்கள் பைகளில் மூன்றாவது  பட்டியில் மட்டுமே அச்சிட அனுமதிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்பிக் நிறுவனம், இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமது உற்பத்தியின் வாயிலாக விநியோகம் செய்கிறது. இதன் தொடக்க விழா, ஸ்பிக் ஆலையில் நடைபெற்றது. பின்னர் ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ஒரே நாடு ஒரே உரம் என்ற கொள்கை அடிப்படையில் பாரத் யூரியாவை ஸ்பிக் ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறது. தமிழகத்தில் 5 மாவட்டத்திற்கு 2100 டன் பாரத் உர விநியோகத்தை தொடங்கி உள்ளது’ என்றார்.

Related Stories: