வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி: கடும் குளிரிலும் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவ விழாவில்  வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

காலை 11 மணியளவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் விநாயகரும்,  சந்திரசேகரரும் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வண்ண மின் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர். தீபத்திருவிழா உற்சவத்தின்போது, அண்ணாமலையார் பவனி வரும் வாகனங்களில் மிக பிரமாண்டமானது வெள்ளி பெரிய ரிஷப வாகனம் என்பது  குறிப்பிடத்தக்கது.  கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Stories: