அறுவடைக்கு தயாரான நெற்பயிரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி: இன்சூரன்ஸ் வழங்காமல் அலைக்கழித்ததால் ஆத்திரம்

பொன்னை: தொடர் மழையாலும் கடும் பனிப்பொழிவாலும் விளைச்சல் பாதித்த நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் விவசாயியை அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த அவர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (35). இவருக்கு அதே கிராமத்தில் உள்ள நிலத்தில் கடந்த  ஆண்டு 5 ஏக்கர் நெற்பயிர் வைத்தார். கடந்த வருடமும் மழையால் பாதிக்கப்பட்டபோது  பயிர் காப்பீடு செய்தும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

 இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் ஐயாறு 50 ரக நெல் ஐந்து ஏக்கரிலும் பயிர் செய்துள்ளார். மேலும் வேளாண்மை துறை மூலம் ரூ.4 ஆயிரம் செலுத்தி பயிர் காப்பீடு செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும் கடுமையான பனிப்பொழிவாலும் நெல் விளைச்சல் ஏற்படவில்லை. இதையடுத்து, காப்பீட்டு நிறுவனத்திடம் ஒருமாதமாக காப்பீடு வழங்க கோரி அலைந்து கொண்டு இருந்துள்ளார். இதற்காக நிலத்தை வேளாண்மை அதிகாரிகள் அளவீடு செய்து தர வேண்டுமாம். ஆனால் வேளாண்மை துறையும் காப்பீட்டு நிறுவனமும் விவசாயியை தொடர்ந்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வேளாண்மைத்துறையின் கவனத்தை ஈர்க்க விவசாயி சிவகுமார் நேற்று அந்த பகுதி விவசாயிகளுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் திடீரென அறுவடைக்கு தயாராக இருந்து சேதமடைந்த நெல் பயிர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் ஒரு சென்ட் அளவுக்கு இருந்த நெற்பயிர்கள் எரிந்து கருகியது. அப்போது மழை பெய்ததால் தீ அணைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்ட ஈடு பெற்றுதருவதாக கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: