கிறிஸ்துமஸ் கேரல் பாடும் நிகழ்ச்சிகள் துவக்கம்: வீடுகளில் ஸ்டார்கள் கட்டி அலங்காரம்

களியக்காவிளை: குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தங்கள்  துவங்கிய நிலையில், கேரல் பாடும் நிகழ்ச்சிகள் துவங்கின. டிசம்பர் மாதம் பிறந்தவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை சார்ந்த ஆயத்தப்பணிகள் துவங்குவது வழக்கம். டிசம்பர் மாதம் துவங்கியவுடன் வீடுகளில் ஸ்டார் கட்டி மின் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மட்டுமல்லாமல், அனைத்து சமய மக்களும் ஸ்டார் கட்டுவதை வழக்கமாக பின்பற்றி வருகின்றனர். இதற்காக மாவட்டத்தின் பெரும்பாலான கடைகளில் விதவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அதோடு வீடுகள் மற்றும் வீடுகளின் முன்புற பகுதிகளிலும் மின் அலங்காரம் செய்யும் பணிகளிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகளில் சென்று கேரல் பாடல் பாடும் நிகழ்ச்சிகளும் துவங்கி விட்டன. கடந்த 2020 ம் ஆண்டு கொரானா மற்றும் ஊரடங்கு காரணமாக கேரல் பாடும் நிகழ்வுகள் வெகுவாக குறைந்தன. ஆனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் கேரல் பாடும் நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்ஐ, ரோமன் கத்தோலிக்க சபைகள்,  தனியார் சபைகள், டிஎம்பிபி, எப்எம்பிபி, விஷ்வவாணி போன்ற பல்வேறு அமைப்புகள் சார்பில் இளைஞர்கள் வீடு வீடாக சென்று கேரல் பாடல்களை பாடி வருகின்றனர்.

வரும் ஆறாம் தேதி கிறிஸ்துமஸ் தாத்தா தினமாக கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து வீடுகளிலும், சபைகளிலும் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் வைக்கப்படுவது வழக்கம். தற்போது அதிக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் பிரமாண்டமாய் அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். கருங்கல், மார்த்தாண்டம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் மற்றும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அருமனை, ஈஞ்சக்கோடு, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாடல் குழுவினருக்கான பாடல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தொடர்ந்து கிறிஸ்துமஸ் மரம், கேக், புத்தாடைகள் என கிறிஸ்துமஸ் சார்ந்த கொண்டாட்டங்களுக்கு குமரி மக்கள் தயாராகி வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. குமரி மேற்கு மாவட்டத்தில் குடில்களை பார்வையிட குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் செல்வது வழக்கம். டிசம்பர் மாதம் துவங்கிய நிலையில், கிறிஸ்துமஸ் சார்ந்த கொண்டாட்டங்களும், அதற்கான ஆயத்தப்பணிகளும்  மாவட்டம் முழுவதும் துவங்கி விட்டன.

Related Stories: