×

மோர்பி பாலம் அறுந்து 135 பேர் பலியான விவகாரத்தில் நிகழ்விடத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் பயணத்திற்கு ரூ.30 கோடி செலவு: அதிர்ச்சி தகவல்

காந்திநகர்: குஜராத் தொங்கு பாலம் அறுந்து 135 பேர் பலியான விவகாரத்தில் நிகழ்விடத்தை பார்வையிட சென்ற பிரதமர் மோடியின் சிலமணி நேர பயணத்திற்கு ரூ.30 கோடி செலவிடப்பட்ட தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோர்பியில் இருக்கும் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து நிகழ்விடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்ற மோர்பி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார். மோடியின் ஒருநாள் வருகைக்காக கோடிக்கணக்கில் பணம் செலவளிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் மோடி வருகைக்கு செலவளிக்கப்பட்ட தொகை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கோரி இருந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மோடியின் ஒருநாள் வருகைக்காக மட்டுமே சுமார் ரூ.30 கோடி செலவிடப்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. மோடி வருகைக்காக ஒரே இரவில் ரூ.11 கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையை சுத்தப்படுத்துதல், வண்ணம் பூசுதல், புதிய படுக்கைகள், குடிநீர் வசதி ஏற்படுத்த ரூ.8 கோடி செலவளிக்கப்பட்டது.

பிரதமருக்கு வரவேற்பு அளிக்க ரூ.3 கோடியும், பாதுகாப்பிற்கு ரூ.2.50 கோடியும், நிகழ்ச்சி மேலாண்மைக்கு ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2 இடங்களில் பிரதமரின் வருகையை புகைப்படம் எடுக்க மட்டும் ரூ.50 லட்சம் செலவளிக்கப்பட்டு இருப்பதாக மோர்பி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. விபத்தில் உயிரிழந்த 135 பேருக்கு மொத்த இழப்பீடாக ரூ.5 கோடி மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் சிலமணி நேர வருகைக்காக ரூ.30 கோடி மக்கள் வரிபணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக விமர்சித்து இருக்கிறார்கள்.    


Tags : PM Modi ,Morbi bridge , Morbi, Bridge, Venue, Visit, Prime, Travel, Cost, Shock, Information
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!