காசி தமிழ்ச்சங்கத்திற்கு எதிர்ப்பு: ராமேஸ்வரத்தில் ரயில் மறியலுக்கு முயன்றோர் கைது

ராமேஸ்வரம்: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த சென்றபோது போலீசார் கைது செய்தனர். காசியில் தமிழக கலை, இலக்கிய, கலாச்சாரம், மொழி பரிமாற்றம் குறித்து காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பலதரப்பினரும் காசி சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து வாரம் ஒருமுறை செல்லும் ரயிலில் அழைத்து செல்லப்படும் இவர்கள், காசியில் 4 நாட்கள் தங்கி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்புகின்றனர்.

டிச. 15ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழக மாணவர்கள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ராமேஸ்வரத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் வில்லியம் ஜாய்சி தலைமையில் மாணவர் சங்கத்தினர், ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திற்கு மறியலுக்கு சென்றனர்.

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, தமிழக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதை கண்டித்து கோஷம் போட்டபடி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சங்க மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

Related Stories: