காலையில் பனி, பகலில் வெயில் காய்ச்சல், இருமல் பாதிப்பால் அவதியுறுவோர் அதிகரிப்பு: மருத்துவமனைகளுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்

சேலம்: சேலத்தில் காலையில் பனிப்பொழிவு, பகலில் கடும் வெயில் தாக்கம் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிகழத்தில் கடந்த 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நடப்பாண்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் வட துருவத்தில் இருந்து குளிர் அலையுடன் கூடிய காற்று வங்க கடல் பகுதியில் நுழைந்தது. அதேநேரத்தில் கடல் பகுதியில் இருந்தும் குளிர் காற்று வீசியது. மழை பெய்ததால் தரைப்பகுதி ஈரப்பதமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் வழக்கமாக டிசம்பர் 15ம் தேதிக்கு மேல்தான் பனிப்பொழிவு மற்றும் குளிர் அதிகமாக இருக்கும். ஆனால், காலநிலை மாற்றத்தால் பனிப்பொழிவும் முன்கூட்டியே தொடங்கி விட்டது.

இதன் எதிரொலியாக நள்ளிரவு தொடங்கி காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடித்து வருகிறது.அடுத்த 10 நாட்களுக்குள் வடகிழக்கு பருவ காற்று வீசுவது படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடுங்குளிர் இருக்கும். தரைப்பகுதியில் இருக்கும் ஈரப்பதம், கடல் பகுதியில் இருந்து வரும் குளிர் காற்று, வட துருவக்காற்று ஆகியவை ஒன்று சேர்ந்து அதிகாலை நேரங்களில் கடுமையான பனி மூட்டம் ஏற்படும். இதனால் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கண்ணை மறைக்கும். இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன்  செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் கணக்குப்படி மார்கழி மாதம் வர வேண்டிய குளிர், கால நிலை மாற்றம் காரணமாக கார்த்திகை மாதத்திலேயே வந்து விட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஒரு வாரமாக காலை 9 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் இருக்கிறது. இதனால் நடை பயிற்சி செய்வோர், விளையாட்டு பயிற்சி செய்வோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக விரைவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக, ஏற்காடு மலைப்பகுதி முழுவதும் மதியம் வரை பனிப்பொழிவு இருப்பதால், பள்ளி மாணவ, மாணவிகள், சாலையோர கடை வைத்திருப்பவர்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜருகுமலை, கருமந்துறை, கல்வரயான் மலை பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், இரவு நேரங்களிலும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, கிளினிக் உள்ளிட்டவைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

 இது குறித்து பொதுநல மருத்துவர்கள் கூறியதாவது: காலநிலை மாற்றம் காரணமாக, நாளுக்கு நாள் பனிப்பொழிவு, குளிர் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நடப்பாண்டில், முன்கூட்டியே பனிப்பொழிவு மற்றும் குளிர் தாக்கம் அதிகரித்துள்ளது. நகரப்பகுதிகளில் காலை 9 மணி வரையிலும், மலைப்பகுதிகளில் மதியம் வரையிலும் பனிப்பொழிவு இருக்கிறது. இந்த காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எளிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர், குழந்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும். பருவமழை காரணமாக, டெங்கு, நிமோனியோ உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏதேனும் பாதிப்பு வந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பனிப்பொழிவு, குளிர் தாக்கம் முடியும் வரை கேன் தண்ணீரை தவிர்க்க வேண்டும் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும். இதேபோல் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

ஆஸ்துமாவுக்கு வாய்ப்புள்ளது

‘‘சேலம் மாவட்டத்தில் தீபாவளிக்கு பிறகு மாசு பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தும், பரவலாக மழை பெய்தும் வருகிறது. தற்போது, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மாசு பாதிப்பும் சேர்ந்துள்ளது. இதனால் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு காலத்தில் குழந்தைகளுக்கு மூக்கு அடைப்பு போன்ற பாதிப்பு ஏற்படும். இந்த சீசனில் காற்றில் தூசி கலந்து குளிர்ச்சியாக இருப்பதால் ஆஸ்துமா பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் மூக்கடைப்பு ஏற்பட்டு, குழந்தைகள் சுவாசிக்க மிகவும்  சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் கொடுக்க வேண்டும்,’’ என்பது குழந்தைகள் நல மருத்துவர்களின் வேண்டுகோள்.

குழந்தைகள் மீது கவனம் தேவை

‘‘தூங்கும் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மின் விசிறிக்கு கீழ் குழந்தைகளை படுக்க வைக்கக்கூடாது. வீட்டில் தூசியில்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் பழ ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் காய்சல் பாதிப்பு ஏற்படும். எனவே, குழந்தைகளை இரவில் சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது துணிகளால் முழுவதும் மூடி பாதுகாக்க ணே்டும். பெரும்பாலும் வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்,’’ என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: