லீவு கேட்ட போலீஸ்காரரை ஆபாசமாக பேசிய டிஎஸ்பி: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, பயிற்சி காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆயுதப்படை டிஸ்பியாக விநாயகம் பணியாற்றி வருகிறார். இவர் காவலர்களிடம் மோசமாக நடந்துகொள்வதாக அங்குள்ள காவலர்கள் பலர், அடுக்கடுக்கான புகார்களை ஏற்கனவே மாவட்ட எஸ்பியிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ஒருவர், விடுமுறை கேட்டு டிஎஸ்பி விநாயகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் டிஎஸ்பி விநாயகம், விடுமுறை அளிக்காமல் அந்த காவலரை ஆபாசமாக பேசி ‘அலுவலகத்தை விட்டு வெளியே போ’ என விரட்டியடித்துள்ளார். இதுகுறித்த ஆடியோ பதிவு  திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஎஸ்பி விநாயகத்திடம் கேட்டபோது, ஆயுதப்படை டிஎஸ்பியாக நான்தான் முதன் முதலாக பொறுப்பேற்றேன். அனைவரிடமும் பணிகள் விவகாரத்தில்  கண்டிப்புடன் செயல்படுவதால் இதுபோன்று புகார் கூறுகின்றனர் என்றார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் 90 சதவீத போலீசார் திருமணமானவர்களாக உள்ள நிலையில், அவர்களை இரவு நேரத்தில் வீட்டிற்கு அனுப்பாமல் கழிவறை வசதி கூட இல்லாத ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல காவலர்கள் டிஎஸ்பி மீது பல்வேறு புகார் மனுக்களையும், காவலரை, டிஎஸ்பி ஆபாசமாக பேசும் ஆடியோ பதிவையும் இணைத்து தமிழக முதல்வர், டிஜிபி, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளனர்.

Related Stories: