திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்; ஜனவரி 2 முதல் 11 வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் வழியாக அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பையொட்டி வரும் ஜனவரி 2ம்தேதி முதல் 11ம்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட (சொர்க்க) வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக்கூட்டம் அன்னமய்யா பவனில் அதன் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ம்தேதி முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக 10 நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஜனவரி 2ம்தேதி நேரடியாக வரும் விஐபிக்களுக்கு மட்டுமே விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும். ஜனவரி 2ம் தேதி முதல் 11ம்தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் வழங்கப்படும். சர்வ தரிசனத்திற்கான (இலவச) டோக்கன் கவுன்டர் ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்கப்படும். திருப்பதியில் உள்ள கவுன்டர்கள் டோக்கன்கள் தீரும் வரை திறந்திருக்கும். வைகுண்ட வாயில் வழியாக தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 2.5 லட்சம் பேருக்கு ₹300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும்.

ஏழுமலையான் மூலவர் சன்னதி கருவறை மேல் உள்ள ஆனந்தநிலையம் தங்க தகடு பதிக்கும் பணிகளுக்காக, பிப்ரவரி 23ம்தேதி பாலாலயம் நடத்த முகூர்த்த நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல் மூலவர் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை கொண்டு ஆனந்த நிலையத்தில் தங்கதகடு பதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: