இயற்கை எழில் கொஞ்சும் இடமான மஞ்சளாறு அணை சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா?.. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: தமிழகத்தில் மலைகளின் ராணியாக ஊட்டி, இளவரசியாக கொடைக்கானல் திகழ்கிறது. சீசன் நாட்கள் மட்டுமா? இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் படையெடுத்தபடியே உள்ளனர். அதனைப்போன்றே தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, வருசநாடு, போடிமெட்டு போன்ற பகுதிகளை மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் அருவிகள், மலைகள், அணைகள், நதிகள், குளங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் முக்கிய அணைகளில் மஞ்சளாறு அணையும் ஒன்று.

பெரும்பாலும் தேனி மாவட்ட அணைகள் என்றால் ஆண்டிப்பட்டி வைகை அணை, பெரியகுளம் சோத்துப்பாறைதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், காற்று மாசு இல்லாமல் அமைதியாக இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மஞ்சளாறு அணை உள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு முக்கிய குடிநீர் மற்றும் ஆயக்கட்டு பாசனத்திற்கு முக்கிய காரணியாக இந்த மஞ்சளாறு அணை விளங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்லும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள டம்டம் பாறை என்ற இடத்தில் சுற்றுலா வாகனத்தை நிறுத்தி பாப்பார்கள். அங்கிருந்த கீழே பார்த்தால் மஞ்சளாறு அணை ஒரு சிறிய குளம்போல் காட்சியளிக்கும். ஆனால், அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் மஞ்சளாறு அணை என தெரியாது.

தேவதானப்பட்டியில் இருந்து சுமார் 10கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணை 487.35 மில்லியன் கன அடி தண்ணீரை கொள்ளளவாக கொண்டுள்ளது. இந்த அணைக்கு வரட்டாறு, மூலையாறு, தலையாறு, மஞ்சளாறு ஆகிய நீர்பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைகள் மீது மழை நீர் விழுந்து வருவதால் இந்த தண்ணீர் மருத்துவ குணம் மிக்கதாக வரலாறு கூறுகிறது. சுற்றுலா தலமாக்க கோரிக்கை முற்றிலும் இயற்கை எழில் நிறைந்த இந்த அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் இது தொடர்பாக பெயரளவில் ஆய்வு செய்து கானல் நீராக்கினர். தேவதானப்பட்டியை கடந்து செல்லும் போது இருபுறமும் வயல்கள், விளைநிலங்கள் என கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரியும். தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். மஞ்சளாறு அணை செல்லும் சாலையில் இருந்து பிரிந்து மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு வடக்கு நோக்கி சாலை செல்கிறது. பின்னர் மீண்டும் மஞ்சளாறு அணையை ஒட்டி ஒரு சாலை மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு செல்கிறது. இந்த இரு சாலைகளையும் அகலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மஞ்சளாறு அணையை பார்க்க செல்ல ஏதுவாக இருக்கும்.

மஞ்சளாறு அணையில் சிறுவர் பூங்கா, ஊஞ்சல், பார்க், உள்ளிட்ட சுற்றுலா தலத்தில் உள்ள அனைத்தையும் கொண்டு வரவேண்டும். மேலும் இங்கு தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த அணையை சுற்றுலா தலமாக்கினால், விலங்குகள் பற்றி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த மீன் குஞ்சு பொரிப்பகம் பார்வையிட ஏதுவாக இருக்கும். பல ஏக்கர் பரப்பளவில் அணையில் புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை அகற்றி, சுற்றுலாத்தலத்திற்கு தேவையானவற்றை செயல்படுத்த வேண்டும்.

அதிக பரப்பளவை கொண்ட இந்த அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிறுவர் பூங்கா, ஊஞ்சல் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு பின்பு படகு சவாரி செய்ய விரும்புவார்கள். அதற்கு ஏற்ற பாதுகாப்பை ஏற்படுத்தி பாதுகாப்பான படகு சவாரி இருந்தால் இந்த மஞ்சளாறு அணைக்கு பெருமை சேர்க்கும். அவுட் போலீஸ் ஸ்டேசன். மஞ்சளாறு அணையில் ஓபி (அவுட் போலீஸ் ஸ்டேசன்) அமைக்க வேண்டும். மஞ்சளாறு அணையில் அவுட் போலீஸ் ஸ்டேசன் அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பும், போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்படாது. விரைவில் மஞ்சளாறு அணையை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: