உற்பத்தி அதிகரிப்பால் வெளியூர்களுக்கு தேங்காய் ஏற்றுமதி உயர்வு: ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தினமும் 10 லட்சம் தேங்காய்கள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரம் மற்றும் ஆனைமலை,ஆழியார், சேத்துமடை, ஒடையக்குளம்,அம்பராம்பாளையம், ராமநாதபுரம், வடக்கிபாளையம், சூலக்கல், கோமங்கலம், கஞ்சம்பட்டி, கோபாலபுரம், மண்ணூர், சமத்தூர், கோட்டூர், நெகமம், கோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் தென்னை சாகுபடியே அதிகளவு உள்ளது.

 ஒவ்வொரு ஆண்டும்,தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது, தென்னையில் உற்பத்தியாகும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மேலும், பொள்ளாச்சி தேங்காய்க்கு, வெளியூர்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனாலே இங்கு உற்பத்தியாகும் தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.  சில சமயங்களில் வெளியூர் வியாபாரிகள் பொள்ளாச்சிக்கே நேரடியாக வந்து வாங்கி செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

 சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாததால், அந்நேரத்தில் வறட்சி ஏற்பட்டது.  இதனால் பல தென்னை மரங்கள் பட்டு போனது போல் ஆனதுடன்,  தேங்காய் விளைச்சல் கணிசமாக குறைந்தது. மேலும், இளநீர்,தேங்காய் மற்றும் மஞ்சி உள்ளிட்டவை வெளியிடங்களுக்கு அனுப்புவது குறைந்தது. அந்நேரத்தில் தேங்காய் உற்பத்தி  குறைவால், ஒரு கிலோ தேங்காய் ரூ.45 முதல் அதிகபட்சமாக ரூ.55வரை என தரத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பின் கடந்த 2019ம்  ஆண்டில் இருந்து மே மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும் தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக,  மீண்டும் தேங்காய் உற்பத்தி அதிகரிக்க  துவங்கியது.அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழைக்கு அடுத்தப்படியாக வடகிழக்கு பருவமழையும் பல நாட்கள் தொடர்ந்து பெய்ததால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தேங்காயின் உற்பத்தி மேலும் அதிகமானது. இதன் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தேங்காய் விலை குறைய துவங்கியது.

 அப்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.25 முதல் ரூ.30வரை என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த ஆண்டில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும், அதன்பின் வடகிழக்கு பருவமழையும் பெய்ததால், தென்னையில் தொடர்ந்து தேங்காய் உற்பத்தி அதிகமானது. அதிலும், கடந்த சில மாதமாக தேங்காய் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகமாகி, ஒரு கிலோ தேங்காய் ரூ.18 முதல் அதிகபட்சமாக ரூ.28 என் விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

 தேங்காயின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டிருந்தாலும், தேங்காயின் தேக்கத்தை தவிர்க்க வெளி மாவட்டம் மற்றும் கேரளா,கர்நாடகா,ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து, கடந்த ஒராண்டுக்கு முன்பு வரை அதிகபட்சமாக 7 லட்சம் வரையிலான தேங்காயே வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒராண்டாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு என தினமும் 10 லட்சம் தேங்காய் அனுப்பப்படுகிறது.

 இரு ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை நல்லபடியாக தொடர்ந்திருந்ததால், தென்னையில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், உற்பத்தி அதிகரித்து விலை மிகவும் குறைந்துள்ளது. தற்போதய நிலவரபடி கிலோ ரூ.26 வரையே விற்பனை செய்யப்படுகிறது.தேங்காய் விலை சரிவால், சுமார் 50 சதவித தேங்காய்கள் எண்ணெய் தயாரிக்கவே கொண்டு செல்லப்படுகிறது. தேங்காய் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மார்க்கெட்டில் தொடர்ந்து விலை சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகித்தால் மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும்’ என்றனர்.

Related Stories: