18 ஆண்டுக்கு முன் இறந்த தாய் அழைப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாலிபர் தற்கொலை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் தாய் இறந்து 18 ஆண்டுகளாக மனஉளைச்சலில் இருந்து வந்த மகன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்டையார்பேட்டை முருகேசன் தெருவை சேர்ந்தவர் ரஞ்சிதா (29). இவர், தந்தை மற்றும் தம்பி ராஜீ (27)யுடன் வசித்து வருகிறார். பாரிமுனையில் தள்ளுவண்டியில் ராஜீ டிபன் கடை நடத்தி வந்தார். இவரது தாய் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

கடந்த ஒருவாரமாக, ‘தாயை பார்க்க ஆசையாக உள்ளது. என்னை அவர் கூப்படுகிறார்’ என சகோதரி ரஞ்சிதாவிடம் ராஜீ கூறி வந்துள்ளார். இதுகுறித்து, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கச்சென்றுள்ளனர். இரவு 11 மணி அளவில் ரஞ்சிதா இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்து வந்தபோது, தம்பி ராஜீ வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டின் கேட் முன்பு சகோதரியின் துப்பட்டாவில் ராஜீ தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து ராஜீ உடலை கீழே இறக்கி பரிசோதனை செய்தனர். அதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தாய் இறந்தது முதல் கடந்த 18 வருடங்களாக ராஜீ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தாய் தன்னை அழைப்பதாகவும், அவரை பார்க்கவேண்டும் எனவும் கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின், ராஜீ தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: