புழல்: சோழவரம் அருகே காந்தி நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் ஒரு வீட்டுக்குள் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்து கடத்தி செல்ல தயார்நிலையில் இருப்பதாக நேற்றுமுன்தினம் சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அசோகன் என்பவரின் வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அந்த வீட்டுக்குள் சுமார் 300 கிலோ எடையிலான செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்து, கடத்தி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த வீட்டிலிருந்து தப்பி ஓட முயன்ற அசோகன் (50), அருண்குமார் (28) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர்.