காசிமேட்டில் கஞ்சா விற்ற தாய், மகள் சிக்கினர்

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர். காசிமேடு  பவர்குப்பம் பகுதியில் உள்ள அம்மா கிளினிக் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற    போலீசார் சந்தேகத்திற்கிடமாக இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் நின்று கொண்டிருப்பதை கண்டு ரகசியமாக கண்காணித்தனர். மூன்று பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர்களை பிடிக்க சென்றபோது அங்கிருந்து ஆண் மட்டும் தப்பி ஓடி விட்டார்.  இரண்டு பெண்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், காசிமேடு கி பிளாக் பகுதியை சேர்ந்த பிரியா என்கிற பிரியதர்ஷினி மற்றும் சரிதா என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரிய வந்தது. மேலும் பிரியதர்ஷினியின் கணவர் கமல்ராஜூடன் சேர்ந்து இருவரும் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். பிறகு தாய், மகள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2.7 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

பிரியதர்ஷினி மீது காசிமேடு காவல் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள கமல்ராஜ் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா வழக்குகள் உள்பட சுமார் 11 வழக்குகள் உள்ளன. தாய், மகள் மீது வழக்கு பதிவு செய்த காசிமேடு ஆய்வாளர் ராஜேஷ், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: