வியாசர்பாடி மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடிய பிரபல ரவுடி கைது: ஆட்டோ டிரைவரும் சிக்கினார்

தண்டையார்பேட்டை: வியாசர்பாடி மின்வாரிய அலுவலகத்தில் ஸ்டோர் சூபர்வைசராக பணிபுரிந்து வருபவர் சிவமணி (48). இவர், மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சார கம்பிகள் திருடுபோவதாக வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் ரோந்து செல்லும்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தார்.

அதில், மின்வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பிகள் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபா காலனியை சேர்ந்த வசந்த் என்கிற அருண் (24), ஆட்டோ டிரைவர் என்பதும், அவர் கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் போலீசார் அவரது நண்பர் புளியந்தோப்பு கன்னிகா புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரவி என்கிற மாட்டு ரவி (24) என்பவரை கைது செய்தனர். இவர் மீது வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள், விடுமுறை நாட்களில் மின்வாரிய அலுவலகத்திற்கு திருட்டுத்தனமாக சென்று மின் கம்பிகளை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 200 கிலோ இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் கூட்டாக பேசின்பிரிட்ஜ் பகுதியில் நண்பர்கள் துணையுடன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

Related Stories: