குஜராத்தில் ரூ.480 கோடி போதை பொருள் பறிமுதல்: 5 பேர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.480 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை வதோதரா மாவட்டம், சிந்த்ரோட் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் நேற்று சோதனை நடத்தினர்.

இதில்,   ​​ரூ.478.65 கோடி மதிப்புள்ள 63.6 கிலோ மெபெட்ரோன் போதை பொருள் மற்றும் 80.26 கிலோ மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சவுமில் பதக், ஷைலேஷ் கட்டாரியா, வினோத் நிஜாமா,  முகமது ஷஃபி திவான் மற்றும் பாரத் சாவ்தா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், ரசாயனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என உரிமம் பெற்று போதை பொருள் தயாரித்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், வதோதரா நகருக்கு அருகில் உள்ள ஒரு கிடங்கில் ரூ.1,000 கோடி போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: