முதல் காலாண்டை விட பாதியாக சரிந்தது: 2வது காலாண்டில் 6.3% ஜிடிபி வளர்ச்சி

புதுடெல்லி: தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘2022-23ம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக உள்ளது.  கடந்த 2021-22ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 8.4 சதவீதமாக ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.38.17 லட்சம் கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீதமாக அதிகரித்து ரூ.64.95 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே முந்தைய 2021-22ம் நிதியாண்டில் அதே காலகட்டத்தில் ரூ.51.27 லட்சம் கோடியாக இருந்தது’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘‘இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எனவே அடுத்த ஆண்டு பணவீக்கம் குறையும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அளித்த பேட்டியில், ‘‘நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.7 சதவீதத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே கணிக்கப்பட்டபடி நடப்பாண்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சி இலக்கு 6.8-7 சதவீதத்தை எட்ட முடியும்’’ என்றார்.

Related Stories: