தமிழகத்தில் பிடிபட்ட ரூ.360 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழத்தில் பிடிபட்ட ரூ.360 கோடி மதிப்புள்ள போதை பொருள் வழக்கை மத்திய  புலனாய்வு துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை அருகே கடந்த 27ம் தேதி சர்வதேச மதிப்பில் ரூ.360 கோடி  மதிப்புள்ள கொகைன் என்ற  போதைப்பொருள், முப்பது எண்ணிக்கையிலான 20 லிட்டர் வாட்டர் கேன்கள் மூலம் சாதிக்அலி என்பவர் நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீசார் தடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் துணை இல்லாமல் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை என்று செய்திகள் கூறுகின்றன. எனவே, பிடிபட்ட ரூ.360 கோடி மதிப்புள்ள கொகைன் என்ற போதை பொருளின்ஆரம்பத்தையும், முடிவையும் கண்டறிய உடனடியாக இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து, அனைவருக்கும் கடும் தண்டனை வாங்கி தர வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இந்த வழக்கை மத்திய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்க அரசு தவறினால், மத்திய அரசே தலையிட்டு, விசாரணையை தன்வசம் எடுத்துக்கொண்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

Related Stories: