கோவையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அவர்களே போராட்டம்: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கடும் தாக்கு

கோவை: அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலையை கண்டித்து அக்கட்சி போராட்டம் நடத்துகிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக தாக்கினார். கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சாலைப்பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.  

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிடம் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பீட்டில் 18,210 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்களை கொண்டதாக  கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் முடிக்க அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். கோவை மாவட்டத்தில் 2,415 கிமீ சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிக்கப்படுகிறது.

2021-22ம் ஆண்டு 244 கிமீ சாலையை ரூ. 250 கோடி மதிப்பில் பராமரிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கு 151 கி.மீ சாலையை பராமரிக்க ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் சாலைகள் தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுக்கு 2 ஆயிரம் கிமீ வீதம் 5 ஆண்டுகளுக்குள் 10 ஆயிரம் கிமீ ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்தத உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இந்த  ஆண்டிற்கு 2 ஆயிரம் கிமீ சாலைகளை தரம் உயர்த்த ரூ.2,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி ஆகும். கோவை மாவட்டம் தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு தொழில்துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவையில் சாலை பணிகள் சரிவர மேற்கொள்ளப்பட வில்லை என அதிமுக சார்பில் நாளை(2ம் தேதி) போராட்டம் நடத்துவது தொடர்பாக பத்திரிக்கையை பார்த்து தெரிந்து  கொண்டேன். சாலை விவகார போராட்டம் சிரிப்பு வருகிறது.

ஒரு சாலையை போட்டால் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அந்த சாலை பயன்பட வேண்டும். அப்படி பயன்படவில்லை என்றால் தரமற்றவை என்று கருதப்படும். இந்த சாலைகள் போட்டு 2 ஆண்டுகள்தான் ஆகிறது. நாங்கள் வந்து ஒன்றரை ஆண்டுதான் ஆகியுள்ளது. இதனால், இந்த சாலை பணிகள் குறைபாட்டுக்கு 10 ஆண்டு ஆட்சி  நடத்தியவர்கள்தான் காரணம். அப்படி என்றால் தங்களை எதிர்த்து தாங்களே போராட்டம் நடத்துகிறார்கள் என்றுதான் கருத வேண்டும். அதிமுக போட்ட சாலையை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துகிறது. இது எவ்வளவு பெரிய வேடிக்கை. கடந்த அதிமுக ஆட்சி, கடனை வைத்து போன அரசு’’  என்றார்.

Related Stories: