புதுச்சேரியின் செல்லப்பிள்ளை மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீர் உயிரிழப்பு: பக்தர்கள் கண்ணீர்

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி,  நடை பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1997ம் ஆண்டு 5 வயதில் லட்சுமி யானை கொண்டுவரப்பட்டது. பக்தர்களுக்கு செல்லப்பிள்ளையாகவும், மிகவும் நெருக்கமான  யானையாக லட்சுமி திகழ்ந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் நடக்கவில்லை. இந்தாண்டு கோயில் நிர்வாகம், வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோயில் வளாக கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதித்தது.

நீரிழிவு நோயால் காலில் புண் ஏற்பட்டதோடு, உடல் நலக்கோளாறுகளால் லட்சுமி அவதிப்பட்டு வந்தது. இதனால் ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை, பார்வையாளர்கள் பார்க்க வரவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழவகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. அதன் உள் உறுப்புகளை சுத்தம் செய்ய அஸ்தசூரணம் கொடுக்கப்பட்டது. வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின், யானை லட்சுமி கோயிலுக்கு திரும்பும் என வனத்துறை தெரிவித்திருந்தது. தினமும் இருவேளை வாக்கிங் அழைத்துச் செல்லப்பட்டு வந்தது.

 இந்நிலையில் நேற்று காலை லட்சுமியின்  இருப்பிடமான வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து நடைபயணம் சென்றது. அப்போது காமாட்சியம்மன் கோயில் அருகே திடீரென மயங்கி விழுந்தது சிறிதுநேரத்தில் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தது. தகவலறிந்த பக்தர்கள் அங்கு குவிந்தனர். இறந்த யானையை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதனர். அந்த இடமே சோகமயமாக மாறிவிட்டது. யானையை பரிசோதித்த  மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். லட்சுமி யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்களுக்கு மட்டுமல்லாமல், பக்தர்கள், சுற்றுலா பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

லட்சுமியின் உடல் பெரிய கன்டெய்னரில் ஏற்றப்பட்டு மணக்குள விநாயகர் கோயிலுக்கு வெளியே பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையொட்டி கோயில் நடை சாத்தப்பட்டது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று யானைக்கு மலர் மாலை வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மதியம் கோயிலில் இருந்து புறப்பட்ட யானையின் இறுதி ஊர்வலம் நேருவீதி, அண்ணாசாலை, கடலூர் சாலை வழியாக தோட்டக்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள சிவன் கோயில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

* ஒவ்வொரு வீட்டுக்கும் இழப்பு -தமிழிசை

லட்சுமி யானை இல்லாமல் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வருவதை சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. கோயிலுக்கு நாம் வரும்போது ஆசிர்வாதம் மட்டுமல்ல, ஆசையோடு விளையாடும். ஆனால், இன்று அது இல்லை. புதுவை மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள இழப்பாகத்தான் இதை பார்க்கிறார்கள். மறுபடியும் கோயில் நிர்வாகம், அரசு என எல்லோரும் முடிவு செய்து லட்சுமியின் வழித்தோன்றலில் வேறு யானையை கோயிலுக்கு கொண்டுவர  ஏற்பாடு செய்யப்படும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

* பெற்ற மகள் போல் வளர்த்தேன் - பாகன்

கால்புண், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த லட்சுமிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி சிகிச்சைகள், உணவுகளை கொடுத்து பெற்ற பிள்ளையை போல கவனித்து வந்தேன். நடைபயிற்சிக்கு சென்றபோது யானை தள்ளாடியபடி நடந்து வந்ததை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும், இங்கும் ஓடினேன். கடைசி நிமிடத்தில் காரின் மீது மோதி கீழே விழ இருந்த யானை, எனது சொல்லுக்கு கட்டுப்பட்டு காரின் மீது விழாமல் சிறுது தூரம் தள்ளி தரையில் விழுந்து இறந்தது- கேரளாவை சேர்ந்த யானை பாகன் சக்திவேல்.

Related Stories: