அதிமுக ஆட்சியில் அரசு வேலை ரூ.51 லட்சம் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

விழுப்புரம்: விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் குமாரய்யா. இவர் தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் ஆவின் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கடந்த அதிமுக ஆட்சியில் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.  அதில், ஆவின் நிறுவனத்தில் இன்ஜினியரிங் வேலை மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.51 லட்சம் வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் தராமல் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர் மீது துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்தார்.  இந்நிலையில், குமாரய்யாவை நேற்று விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: