89 சட்டப்பேரவை தொகுதிகளில் நடக்கிறது குஜராத்தில் இன்று முதல்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபைக்கு டிச.1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. வழக்கமாக பா.ஜ. வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில் இந்த முறை கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ ஆளும் மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பா.ஜவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இதே போல் காங்கிரசுக்கு ஆதரவாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். இந்திய ஒற்றுமையாத்திரை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி ஒருநாள் மட்டும் குஜராத் சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ள ஆம்ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களில் நடக்கிறது. அங்கு 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 70 பேர் பெண்கள். 14,382 வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 25,434 பூத்களில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டு போட அனுமதிக்கப்படும். அந்த மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   27,978 தலைமை தேர்தல் அதிகாரிகளும், 78,985 வாக்குச்சாவடி அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

* 2017ல் என்ன நிலை?

இன்று ஓட்டுப்பதிவு நடக்கும் 89 இடங்களில் கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ 48 இடங்களிலும், காங்கிரஸ் 40 இடங்களில் வென்றன. ஒரு இடத்தில் சுயேச்சையும் வென்றனர்.

*பணம், மது, போதைப்பொருள் ரூ.290 கோடிக்கு பறிமுதல்

குஜராத் தேர்தலில் 2017ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதை விட இந்த முறை 10.66 மடங்கு அதிகமாக ரூ.290 கோடிக்கு பணம், போதைப்பொருள், மது ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2017 தேர்தலில் ரூ.27.21 கோடி பணம் மற்றும் பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன.

* ஆம்ஆத்மிக்கு ஒரு சீட்கூட கிடைக்காது: அமித்ஷா

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அளித்த பேட்டி வருமாறு: இந்த முறை குஜராத்தில் பாஜ வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்யும். ஏனெனில் பிரதமர் மோடி மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடுவதைப்பற்றி கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் கட்சியை ஏற்றுக்கொள்வதும், ஏற்காததும் மக்களைப் பொறுத்தது. குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சி எங்கும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். அதில் வெற்றி வேட்பாளர் பட்டியலில் ஒரு ஆம் ஆத்மி கட்சியின் பெயர் கூட இடம் பெறாது.

Related Stories: